ஸ்ரீபெரும்புதூர்: ராமாநுஜர் கோயிலில் நித்ய சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீ பெரும்புதூரில் நித்திய சொர்க்கவாசல் திறக்கப்பட்டு மணிக்கதவு வழியாக உள்புறப்பாடு நடைபெற்றது
19 வருடங்களுக்கு ஒரு முறை கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஸ்ரீரங்கத்தில் சொர்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகாரசுவாமி திருக்கோயில் ராமாநுஜரின் அவதார ஸ்தலம் என்பதால், ராமாநுஜரை வணங்கினாலே மோட்சத்திற்கு செல்வதற்கான வழி என்பதால் இக்கோயிலில் சொர்க்கவாசல் என தனியாக பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதில்லை.
அதற்கு பதிலாக நித்ய சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகாரசுவாமிக்கு நித்ய ஆராதனைகள் நடைபெற்று, 7:30 மணிக்கு நித்திய சொர்க்கவாசல் திறக்கப்பட்டு மணிக்கதவு வழியாக உள்புறப்பாடு நடைபெற்றது. பின்பு தங்கமண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி (ராமாநுஜர்) ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்க மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார ஸ்வாமி (ராமானுஜர்) ஆகியோரை தரிசித்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu