ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள இந்திரா சிலை
சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவில் உள்ள இந்திரா காந்தி சிலை.
பாரதப் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது தங்க நாற்கர சாலை திட்டம் துவங்கப்பட்டது. அப்போது வாகன ஓட்டிகள் அதனை பெரிதும் வரவேற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து வந்த அரசுகளும் இதனை மேற்கொண்டு வந்தன. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தற்போது அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், சாலைகளின் தரம் மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சென்னை - பெங்களூரு விரைவு சாலை, சென்னை பெங்களூர் அதிவேக விரைவு சாலை , தொழிற் கூட சாலைகளில் பல பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்று சென்னை- பெங்களூரு சாலைகளில் இப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை துறையும் பல்வேறு தடங்களில் சாலை விரிவாக்க பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகம் எதிரே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 1988 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட இந்திரா காந்தி சிலையானது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்து வந்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை பலமுறை காங்கிரஸ் கட்சியினரிடம் கூறியும் , இந்திரா காந்தி சிலை அகற்றப்படாததால் தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்த்துறையினருடன் இணைந்து நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் இந்திரா காந்தி சிலையை இன்று அகற்ற முற்பட்டனர்.
இப்பணியானது காலை சுமார் ஆறு முப்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 9 மணி வரை நடைபெற்றதால் பெங்களூரு -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் வானங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆமை போல் நகர்ந்து சென்றன. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சுங்குவார்சத்திரம் வரை சுமார் 10 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது .
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் நாங்களே இந்திரா காந்தி சிலையை அகற்றி விடுகிறோம் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் இந்திரா காந்தி சிலையை அகற்றுவதற்கு இரண்டு நாட்கள் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சீரானது.
காலையில் தொழிற்சாலை பணி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக சென்ற பொதுமக்கள் என பலர் இதில் பாதிக்கப்பட்டு இப்பகுதியினை வருத்தத்துடன் கடந்து சென்றதாக கூறினர்.
இந்திய தேசிய காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை இதற்கான நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்க பணிக்கு விரைந்து உதவ வேண்டும் எனவும் , அப்பகுதியில் மேம்பாலம் கட்ட கோரிக்கை வைத்து அதனை தனது செல்வாக்கு மூலம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu