அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம்

அம்பேத்கர் சிலை பைல் படம்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் 13 கிராமங்களை இணைத்து இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் 67 -வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று காந்தி ஜெயந்தியையொட்டி நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் ஏகநாதபுரம் கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி விமான நிலையம் இப்பகுதியில் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து அங்கு இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் பேசிய ஒருங்கிணைப்பாளர், வளர்ச்சி என்ற நோக்கில் 13 கிராமங்களின் நீர் நிலைகள் குடியிருப்புகள் விவசாயம் நிலங்களை அழித்து உருவாகும் விமான நிலையம் தங்களுக்கு வேண்டாம் எனவும் வேறு மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் என தமிழக அரசுக்கு பலமுறை எடுத்துக் கூறி உள்ளனர். ஆனாலும் பரந்தூர் விமானநிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் அடுத்த கட்டமாக ஒடுக்கப்பட்ட மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் அம்பேத்கர் சிலையிடம் முறையிட்டு , விமான நிலையம் வந்தால் தமிழக வளர்ச்சி எனக் கூறிவரும் தமிழக அமைச்சர்கள், தங்களது மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சொத்துக்களை வளர்ச்சி பணிக்கு அளித்தால் நாங்களும் எங்களுக்கு உண்டான உரிய இழப்பீடு பெற்றுக் கொள்கிறோம் என்று அம்பேத்கர் சிலை முன் அனைவரும் உறுதியளிப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் அதை வரவேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu