தலைமை செயலாளர் வெ.இறையன்பு கிராம சபை கூட்டங்களில் பங்கேற்பு
நடுவீரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமை செயலாளர் வெ.இறையன்பு
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு கலந்து கொண்டார்கள்.
இந்தக் கூட்டங்களில், ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், கிராம ஊராட்சிகள் தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தி பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பெரிய பதாகை மூலம் வரவு, செலவு கணக்கு (படிவம் 30-இன் சுருக்கம்) வைக்கப்பட்டிருந்தது. கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. இச்சிறப்புக் கிராமசபைக் கூட்டங்களில் கூட்டப் பொருட்கள் ஊராட்சி மன்ற செயலர்களால் படிக்கப்பட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு , மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் சால்வை அணிவித்துக் கௌரவித்தனர்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி, நடுவீரப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் ஞானமணி சகாயராஜ், சோமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆரிக்கியம் ஜெயபால், துணைத் தலைவர் திருமதி பவானி ஞானசேகர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu