சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்க காஞ்சிபுரம் சிறுமிகளுக்கு உதவி கிடைக்குமா?

கோவாவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் தங்கம் , வெள்ளி பதக்கங்களை பெற்ற காஞ்சிபுரம் வீரர் வீராங்கனைகள்.
தேசிய அளவில் கோவாவில் நடைபெற்ற யோகா போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்த காஞ்சிபுரம் சிறுமிகள் தாய்லாந்து சென்று சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்க உதவி கரம் நீளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதியில் கோவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது.
அதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே உள்ள சாலமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 11 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 8 தங்கப்பதக்கங்கள் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
மேலும் அவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
மிகவும் பின்தங்கிய குடும்ப சூழல் காரணமாக இந்த 11 குழந்தைகள் கோவாவில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் பங்கேற்க பல சிரமங்களை தாண்டி பயிற்சியாளர் சொர்ண மாலதியின் முயற்சியால் பங்கேற்று தேசிய அளவில் வெற்றிபெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்
இப்பொழுது சர்வதேச அளவில் தாய்லாந்தில் நடைபெற உள்ள யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டால் 11 பேரும் முதல் இடத்தைப் பிடித்து தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பார்கள்.
ஆனால் இவர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் பெற்றோர்களிடத்தில் போதிய வசதி வாய்ப்பு இல்லாததால் இந்த குழந்தைகள் அனைவரும் தாய்லாந்துக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது.
ஆகவே சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்க உதவிக்கரம் நீட்டினால் தாய்லாந்து சென்று நாங்கள் வென்று எங்கள் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம் என்று ஆர்வமுடன் கூறுகின்றனர் அந்த சிறுமிகள். இந்த சிறுமிகளின் கோரிக்கையை ஏற்று விளையாட்டு மீது ஆர்வம் உள்ளவர்கள் உதவி செய்தால் நிச்சயம் இந்த மாணவிகள் வெற்றி பெறுவதோடு சர்வதேச அளவில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu