காஞ்சிபுரம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆயுதப்படை காவலர் கைது

காஞ்சிபுரம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆயுதப்படை காவலர் கைது
X

 கைது செய்யப்பட்ட அயுதபடை காவலர் சதீஷ்.

காஞ்சிபுரம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்‌ மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேலேறி கிராமத்தில் மூதாட்டி தலையின் மீது அம்மி கல்லை போட்டு கொடூர கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மூதாட்டி யசோதம்மாளுக்கு உறவினர் வழியில் பேரன் முறையான ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேலேறி கிராமத்தை சேர்ந்தவர் யசோதம்மாள்(76).இவருக்கு ஒரு மகனும்,மூன்று மகளும் உள்ளனர்.இவர்கள் நால்வருமே தங்களது குடும்பத்தாருடன் சென்னையில் வசித்து வருகின்றனர்.

மூதாட்டி யசோதம்மாள் மேலேறி கிராமத்திலேயே தனியாக தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந் நிலையில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பக்கத்து வீட்டினரோடு பேசிவிட்டு தூங்க சென்ற நிலையில் 29-ஆம் தேதியான மறுநாள் பிற்பகல் ஆகியும் மூதாட்டி வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் மூதாட்டி தலைகுப்புற கவிழ்ந்த படி தலையில் அம்மி கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.

இதனையெடுத்து அக்கம் பக்கத்தினர் சுங்குவார்சத்திரம் காவல்நிலைத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூதாட்டியின் வீட்டிலிருந்த நகைகளும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை தடயங்களை சேகரித்தனர்.இந்த நிலையில் சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மூதாட்டி வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் மூதாட்டியின் செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது யசோதம்மாள் யார் யாரிடம் தனது போனில் தொடர்பு கொண்டு உள்ளார் கொலையாளி யார், இந்த கொலைக்கான காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியின் பங்காளிகளில் பேரன் முறையான சென்னையில் ஆயுதப்படை காவலராக இருந்துவரக்கூடிய சதீஷ் (எ)சக்திவேல் என்பவர் தான் யசோதாம்மாவின் தலையின் மீது அம்மிக் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தது போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தற்போது தெரியவந்திருக்கிறது.எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மூதாட்டி சதீஷின் குடும்பத்தாருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்ததாக சொல்லப்படும் நிலையில் நகைக்காக கொலை செய்தாரா அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் கொலை செய்தாரா என விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இக்கொலை சம்பவத்தில் இவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
future of ai act