செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கன அடிநீர் வெளியேற்றம்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கன அடிநீர் வெளியேற்றம்
X

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, இன்று பிற்பகல் 3 மணி முதல், ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து காரணமாக கடந்த ஒரு வார காலமாக 500 கன அடி நீர் வெளியேற்றி வந்த நிலையில், தற்போது ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை, இம்மாதம் (நவம்பர்) ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் துவங்கும் என, சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வரும் நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என இரு தினங்களுக்கு முன் அறிவித்து, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 11 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 213 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 232 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 218 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 161.5 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 287.6 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 323.9 மில்லி மீட்டர் என மொத்தம் 1436 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள 381 ஏரிகளில் 50 ஏரிகள் முழு கொள்ளளவையும் , 43 ஏரிகள் 75 சதவீதத்தையும், 150 ஏரிகள் 50 சதவீதத்தையும் தாண்டி உள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்றுப்பகுதிகளில் கன மழை பெய்வதால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, கடந்த எட்டு தினங்களாக 500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்ட உயரம் 20.15 அடியும், நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2641 மில்லியன் கன அடியாக இருந்தது.

நீர்ஆதாரமாக உள்ள ஏரிகளில் இருந்து நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது படிப்படியாக மேலும் உயர்த்தப்படும் எனவும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 20 அடியில் வைத்து கண்காணிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அனைத்து நீர்நிலைகளையும் கண்காணிக்குமாறு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அனைத்து பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது வரும் தகவல்களைக் கொண்டு அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
ai healthcare products