மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 64 நபர்களுக்கு நலத் திட்ட உதவிகள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ சுந்தர்.
ஐயங்கார்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் ஏராளமானோர் மனு அளித்த நிலையில் 64 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இரண்டாவது கட்டமாக மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் அளிக்கப்படும் மனுக்கள் நேரடியாக பதிவு செய்யப்பட்டு 40 நாட்களுக்குள் அதற்கான தீர்வு அல்லது அதற்கான நிராகரிப்பு காரணங்கள் புகார்தாரருக்கு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கோளிவாக்கம் ஐயங்கார்குளம், வளத்தோட்டம், விப்பேடு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்களாக அளித்து பதிவு செய்து கொண்டனர்.
இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் பார்வையிட்டு, முகாமில் பதிவு செய்யப்படும் மனுக்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 14 நபர்களுக்கு வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் பணி ஆணையும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் நடும் பணி ஆணையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட நான்கு நபர்களுக்கு அதற்கான சான்றிதழும், மின்சாரத்துறை சார்பில் இரண்டு கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும், இரண்டு நபர்களுக்கு ஜாதி சான்றிதழும், 15க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஐந்து லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும் வழங்கினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி, துணைத்தலைவர் திவ்யப்பிரியா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu