அறிவித்த 10 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கிய உத்திரமேரூர் புறவழிச்சாலை பணி

அறிவித்த 10 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கிய உத்திரமேரூர் புறவழிச்சாலை பணி

ரூ. 37.08 கோடி மதிப்பீட்டில் உத்திரமேரூர் புறவழிச் சாலை பணிகளை துவக்கி வைத்த உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்.

ரூ. 37.08 கோடி மதிப்பீட்டில் நான்கு கிலோ மீட்டர் தூரம் அமைய உள்ள உத்திரமேரூர் புறவழி சாலை பணிகளுக்கு இன்று பூமி பூஜை போடப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் 37.08 கோடி மதிப்பீட்டில், உத்திரமேரூர் புறவழிச் சாலை பணிகளை இன்று பூமி பூஜையுடன் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் நகரில் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். உத்திரமேரூரை சுற்றியுள்ள 30 கிராம மக்களும் தங்கள் தேவைகளுக்கு உத்திரமேரூர் பகுதியையே நாடும் சூழல் தான் உள்ளது. மேலும் செய்யார் , வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பேருந்துகள் சென்னைக்கு உத்திரமேரூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு வழியாகவும் சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

உத்திரமேரூர் நகரில் உள்ள சாலைகள் மிக குறுகலானது என்ற நிலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இச்சாலையிலேயே நடத்தப்படுவதால் அவ்வப்போது பெரிதும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவம் தொழிற்சாலை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் குறித்த நேரத்திற்கு செல்ல இயலாத நிலை அவ்வப்போது ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2013 - 2014 சட்டமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் , உத்திரமேரூர் புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

அறிவித்த பிறகு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் அமைய உள்ள இந்த புறவழிச் சாலைக்கு தேவையான நிலம் எடுப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கு போதிய நிதி குறைவாக உள்ளதாக கூறி திருத்தம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ரூபாய் 37.08 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது.

மேலும் நிலம் எடுப்புக்கு இழப்பீடாக விவசாயிகளுக்கு அளிக்கும் வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது.

இதற்குள் பத்தாண்டு காலம் இந்த பணிகள் மேற்கொள்ள கால அவகாசம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மீண்டும் ஏமாற்றமே அடைந்துள்ளதாக எண்ணி வந்தனர். மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் இது பிரதான வாக்குறுதியாக அப்பகுதியில் அமைந்தது.


இந்நிலையில் புறவழிச் சாலை பணிகள் துவங்க உள்ளதை அறிந்து மகிழ்ச்சியுற்ற நிலையில், இன்று ஏ.பி. சத்திரம் அருகே பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த இந்த புறவழிச் சாலை திட்டம் இன்று துவங்கி , நான்கு கிலோமீட்டர் தூரம் இந்த புறவழிச் சாலை அமைய உள்ளது. இப்பணியினை 15 மாத காலத்திற்குள் நிறைவடையும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக நிலம் வழங்கிய நபர்களுக்கு உரிய இழப்பீடும் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் , சாலை 10 மீட்டர் அகலம் கொண்ட நிலையில் அமைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்ட பணிகள் தற்போது துவங்கி உள்ளது உத்திரமேரூர் பகுதி மக்களிடையே மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சசிகுமார் , ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா, திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story