அதிக பாரம் ஏற்றி சென்ற கனரக லாரிகள் இரண்டு பறிமுதல்
அதிக பாரம் மற்றும் போதிய ஆவணங்கள் இன்றி சவுடு மணல் ஏற்றிச் சென்ற கனரக லாரியை பறிமுதல் செய்து காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் அருகே சோதனையின் போது அரசு விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி சென்ற இரண்டு கனரக வாகனங்களை புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் பறிமுதல் செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் திருமுக்கூடல், மாகரல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் மற்றும் அரவை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை, காவல் துறை வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவைகள் பல்வேறு விதிமுறைகளை கனரக வாகனங்களுக்கு விதித்திருக்கிறது.
இந்நிலையில் முக்கியமான ஒன்றான கூடுதல் பாரங்கள் ஏற்றி செல்வதை கனரக வாகனங்கள் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், நேற்று காஞ்சிபுரம் - வையாவூர் சாலை பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவ்வழியாக அதிக பாரம் ஏற்றுக் கொண்டும் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் வந்தபோது அதனை மடக்கி இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சரவணன் முற்றிலும் அரசு விதிகள் மீறப்பட்டுள்ளதாக இரண்டு கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய முயன்ற போது லாரி ஓட்டுநர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு இரண்டு வாகனங்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கனிம வள ஏற்றி செல்லும் லாரிகளை அவ்வப்போது வட்டார போக்குவரத்து துறை ஆய்வு செய்தாலும் தொடர்ச்சியாக அரசு விதிகளை மீறி செல்வதும் தார் பாய் போடாமல் செல்வதும் உள்ளிட்டவைகளையும் அலுவலர்கள் கவனிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu