காஞ்சிபுரத்தில் 9 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ. 11லட்சம் கடனுதவி

காஞ்சிபுரத்தில் 9 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ. 11லட்சம் கடனுதவி
X

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க கடனுதவி வழங்கினார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு 358 மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை கூட்டுறவுத்துறை மின்சார வாரியம் மற்றும் விவசாயம் சார்ந்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 358 கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து 9 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ. 11.30 லட்சத்திற்கான கடனுதவி ஆணைகளை வழங்கினார்.

இன்று ஊத்துக்காடு பகுதியில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் வணிக வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி சாவித்திரி மணிகண்டன் மனு அளித்தார்.

கோட்டூர் கிராமத்தில் முறையாக அரசு விதிகளை பின்பற்றி சாலை அமைக்கவில்லை என கூறி மனு அளிக்கப்பட்டது.

ஈஞ்சம்பாக்கத்தில் சொத்துக்காக தன்னை அடித்து துன்புறுத்துவதாக மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மங்கோலியா நாட்டில் நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற அமுதசுகந்தி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story