மிக்ஜாம் புயல் மழையால் 900 ஆண்டு பழைமை வாய்ந்த கோயில் சுவர் இடிந்தது

மிக்ஜாம் புயல் மழையால் 900 ஆண்டு பழைமை வாய்ந்த கோயில் சுவர் இடிந்தது
X

தொடர் மழை காரணமாக அழிசூர் அருணாலேஸ்வரர் திருக்கோயில் சுவர் இடிந்து விழுந்தது.

உத்திரமேரூர் அடுத்த ஆழிசூர் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்து உள்ளது.

உத்திரமேரூர் அருகே மிக்ஜாம் புயல் காரணமாக அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்த 900 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் ஒரு பகுதி இடிந்து சேதம் அடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிசூர் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து அருணாசலேஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் அம்மன், விநாயகர், முருகர்,நந்தி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கோவில் பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்த நிலையில் அதனை புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அறநிலையத்துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் அறநிலையத் துறையினர் இந்த சிவன் கோவிலை சீரமைக்க செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது.


இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக இக்கோவிலின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இது குறித்து கிராம மக்கள் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலின் உள்ளே உள்ள தெய்வ சிலைகளை வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த சிவன் கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இக்கோயிலில் பார்வையிட்டு உடனடியாக பழங்கால திருக்கோயிலாக புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்து சமய அறநிலைய துறைக்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story