போலீஸ்காரர் மனைவி தற்கொலையில் திடீர் திருப்பம்: வரதட்சணை கொடுமை புகார்

போலீஸ்காரர் மனைவி தற்கொலையில் திடீர் திருப்பம்: வரதட்சணை கொடுமை புகார்
X

தாரணி

காஞ்சிபுரம் போலீஸ்காரர் மனைவி தற்கொலை வழக்கில் அவரது தாயார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஐந்து பேர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் காவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு வரதட்சணை கொடுமையே காரணம் எனவும், கணவர் உட்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணின் தாயார் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அய்யாதுரை நாயுடு தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது மகளான தாரணியை காஞ்சிபுரம் , திருக்காலிமேடு , என் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்த காவலர் கிரிதரன் என்பவருக்கு கடந்த 2019ல் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

தற்போது கிரிதரன் கூடுவாஞ்சேரி பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் , இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகனும், ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் ராஜேஸ்வரி தனது மகளுக்கு போன் செய்த போது அவருடைய மாமனார் எடுத்து உனது மகள் தாரணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் என கூறி போனை துண்டித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் தாரணியின் தாய் ராஜேஸ்வரி அளித்த புகாரில், தனது மகளை திருமணம் செய்த நாள் முதல் , அவரது மாமனார் மாமியார் கணவர் , மைத்துனர் மற்றும் நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில் கடந்த வாரம் கூட தனது தாலியை அடகு வைத்து இரண்டு லட்சம் வழங்கிய நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியது சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும், காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு இவர்கள் ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளதாகவும் , காவலர் கிரிதரன் தனது மனைவி பெயரில் ஐஎஃப்எஸ் நிறுவன முகவர் பதிவு செய்து சுமார் 14 கோடி ரூபாய் பல்வேறு நபர்களிடம் முதலீடு பெற்று, அந்நிறுவனத்தில் செய்துள்ள நிலையில் தற்போது பிரச்சனை அதிகமாக ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் காவல்துறையில் பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

ஏழு மாத கைக் குழந்தையுடன் பெண்ணின் குடும்பத்தினர் நின்றிருந்த காட்சி அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!