சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர் வலியுறுத்தல்

சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர் வலியுறுத்தல்
X

மூலவர் விமானத்திற்கு புனித நீரூற்றும் சிவாச்சாரியார்கள்

காஞ்சிபுரத்தில் திருவீரட்டானேசுவரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.

சிறிய கோயில்களை பராமரிப்பதன் மூலம் முன்னோர்களின் செயல் சிறப்படையும் என காஞ்சிபுரத்தில் திருவீரட்டானேசுவரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.

காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில் சாக்கியநாயனார் பூஜை செய்த சிறப்புடைய கோயிலாக இருந்து வருவது காமாட்சி அம்பாள் சமேத திருவீரட்டானேசுவரர் திருக்கோயில். இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசியதாவது ,

காமாட்சி,மீனாட்சி,அகிலாண்டேசுவரி உள்ளிட்ட பெரிய கோயில்களில் கும்பாபிஷேகங்களை நடத்திய மகா பெரியவர் சுவாமிகளும், ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளும் சிறிய கோயில்களும் மழையாலோ, வெயிலாலோ பாதிக்கப்படாமல் இருக்க அவற்றையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்ற பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதன் விளைவாக ஏராளமான சிறிய கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.கோயில்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று இரு பெரியவர்களும் காட்டிய வழியில் நாமும் பயணிக்கிறோம்.பல சிறிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி வருகிறோம்.


கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட சங்கர மடம் மடாதிபதி ஸ்ரீ விஜியேஜேந்திர சரஸ்வதி சாமிகள்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரானது சங்கர மடத்தால் செய்து கொடுக்கப்பட்டது. காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் பல பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.60 கிராமத்து மக்கள் பயன் பெறும் வகையில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் உருவாக சங்கர மடம் பல முயற்சிகளை செய்துள்ளது.

வெளியூர் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக காஞ்சிபுரத்தில் யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆதிசங்கரரும் திருவீரட்டானேசுவரர் கோயில் சிறப்பை சிவானந்த லஹரி என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.கலாச்சாரத்தில் பழமையையும்,விஞ்ஞானத்தில் புதுமையையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பிறந்த நாளில் தீபங்களை சிலர் அமத்தி விழாக் கொண்டாடுகிறார்கள்.அவ்வாறு இல்லாமல் தீபங்களை ஏற்றும் வகையில் பிறந்த நாள் விழாக்களை கொண்டாட வேண்டும் என்றும் பேசினார். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சென்னை மகாலட்சுமி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் மகாலட்சுமி சுப்பிரமணியன் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

விழாவில் ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஈஸ்வரமூர்த்தி சிதம்பரம் தியாகப்பா தீட்சிதர்,குறும்பட இயக்குநர் காந்தன்,வலசை ஜெயராமன்,பட்டாபிராமன்,பவித்ரா ரகுராம்,சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story