உலக அளவில் நீரழிவு நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடிக்க ஆராய்ச்சி
நீரழிவு நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் நீரழிவு நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடிக்க ஆராய்ச்சி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.
HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நீரழிவு நோய் சிறப்பு மருத்துவர் பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
பொதுமக்கள் சிறு தானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நீரழிவு நோயாளிகளுக்கான கருத்தரங்கில் நீரழிவு நோய் சிறப்பு மருத்துவர் பன்னீர் செல்வம் பேசினார்.
இந்திய மருத்துவச் சங்கம் காஞ்சிபுரம் கிளை,செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை ஆகியன சங்கரா பல்நோக்கு மருத்துவமனையுடன் இணைந்து நீரழிவு நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் இலவச பொதுமருத்துவ முகாமை நடத்தினார்கள்.
இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.ஒட்டுறுப்பு மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர் பூபதி,சங்கரா பல்நோக்கு மருத்துவமனையின் நிர்வாகி ஸ்ரீராம்,நீரழிவு நோய் ஆலோசகர் ஓ.எம்.சையது அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கரா மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் நந்தகுமார் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கை தொடக்கி வைத்து நீரழிவுநோய் சிறப்பு மருத்துவ நிபுணர் பன்னீர் செல்வம் பேசியதாவது:-
உலக அளவில் இந்தியாவில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை முதலிடத்தில் உள்ளது.1990 ஆம் ஆண்டுகளில் நீரழிவு நோய் அதிகம் இல்லை.ஆனால் இப்போது மிகவும் அதிகரித்துள்ளது.நீரழிவு நோய்க்கு இதுவரை தடுப்பூசி கண்டு பிடிக்கப்படவில்லை.ஆனால் அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
காய்கறிகள்,பாரம்பரிய அரிசி வகைகள் ஆகியனவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளாததும்,உடல் உழைப்பு இல்லாததும்,முக்கியமாக உணவு முறை மாற்றங்களாலும் நீரழிவு நோய் அதிகரித்திருக்கிறது.
அரசு இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்திருக்கிறது. சிறுதானியங்களின் மீது ஓரளவுக்கு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம்,மாவுச்சத்து குறைவு.எனவே நீரழிவு நோயாளிகள், பொதுமக்கள் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டுச்சர்க்கரை,வல்லம்,வெள்ளைச்சீனி, கருப்பட்டி இவற்றாலும் உடலில் ரத்தசர்க்கரையின் அளவு அதிகரிக்க செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.