60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இடத்திற்கு பட்டா கேட்டு ஜமாபந்தியில் மனு..!

60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இடத்திற்கு பட்டா கேட்டு ஜமாபந்தியில் மனு..!
X

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா கேட்டு மனு அளித்த கீழ்க்கதிப்புர் கிராம மக்கள்.

கீழ்கதிர்பூர் பகுதியில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் அந்த இடத்தின் வகைபாடுகளை தவறுதலாக வருவாய் பதிவேட்டில் பதிவு செய்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் அருகே 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 10 தினங்களாக ஜமாபந்தி என கூறப்படும் வருவாய் தீர்வாயம் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

வாலாஜாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகிறார். இதே போல் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி பொதுமக்களிடம் இருந்து பிர்கா வாரியாக வருவாய் தீர்வாய் குறித்த மனுக்களை பெற்று வருகிறார்.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதில் கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் ,

நாங்கள் மேற்படி கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். மேற்படி முகவரியில் எண்.27. கீழ்கதிர்பூர் ஊராட்சி, கீழ்கதிர்பூர் கிராமம் சர்வே எண்.111/1-ல் வீடு கட்டி கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக சுமார் 48 குடும்பங்கள் குடித்தனம் நடத்தி வருகிறோம்.

மேற்படி இடத்திற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்துள்ளோம். மேலும் மின் இணைப்பு, ஆகியவற்றை முறையாக செலுத்தியும், ஊராட்சிக்கு முறையாக வீட்டுவரி, குடிநீர் வரி செலுத்தியும் வருகிறோம்.

மேற்படி வசிக்கும் இடத்தைத் தவிர எங்களுக்கு வேறு எங்கும் நிலமோ, வீட்டுமனையோ ஏதும் கிடையாது. நாங்கள் மிகவும் ஏழை. தினக்கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தி வருகிறோம். மேற்படி இடத்திற்கு பட்டா இல்லாத காரணத்தால் அரசு அறிவிக்கும் எந்தவித சலுகையும் பெற முடியவில்லை.

மேற்படி இடமானது தவறுதலாக கோயில் புறம்போக்கு என பதிவாகியுள்ளது. கோயிலே இல்லாத இடத்தில் கோயில் புறம்போக்கு என்று தவறுதலாக பதிவாகியுள்ளதை SLR., RTI மூலம் அறியப்பட்டது.

மேற்படி இடத்தில் 4 ஏக்கர் 82 சென்ட்டில் ஒன்றரை ஏக்கர் மட்டுமே குடியிருப்புக்கான வகைபாடாக மாற்றம் செய்து, அப்பகுதியில் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் நலன் கருதி பட்டா வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்