பாரம்பரியத்தை காப்பது அவசியம்: மேயர் மகாலட்சுமி யுவராஜ்

பாரம்பரியத்தை காப்பது அவசியம்: மேயர் மகாலட்சுமி யுவராஜ்
X

உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி காஞ்சி பெருமை விளக்கும் 12 அஞ்சல் அட்டையை வெளியிட்ட மேயர் மகாலட்சுமி யுவராஜ், தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து மற்றும் காஞ்சி தபால் கோட்ட முதன்மை அஞ்சலக அலுவலர் பாபு.

அஞ்சல்துறை, தொல்லியல்துறை மற்றும் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் வளாகத்தில் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது

நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என காஞ்சிபுரத்தில் நடந்த உலக பாரம்பரிய தின விழாவில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் பேசினார்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் வளாகத்தில் அஞ்சல்துறை, தொல்லியல்துறை மற்றும் போஸ்ட் கிராஸிங் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடினார்கள்.

காஞ்சிபுரத்தின் பெருமைகளையும், பாரம்பரியத்தையும் விளக்கும் வகையில் பட்டுச் சேலை உற்பத்தி,பொம்மைகள் தயாரித்தல் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளிட்டவற்றை ஓவியமாக வரைந்த 12 அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டன.

காஞ்சிபுரத்தின் முக்கிய பன்னிரண்டு பாரம்பரிய நினைவுகள் குறித்த அஞ்சலக அட்டை.

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவற்றை வெளியிட அதனை தொல்லியல் துறையின் சென்னை வட்டார கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து பெற்றுக்கொண்டார். பின்னர் காஞ்சிபுரம் அஞ்சலக கண்காணிப்பாளர் பாபு கோட்டோவியமாக வரையப்பட்ட அன்னப்பறவை உடைய நிரந்தர சித்திர முத்திரையை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உலக அதிசயங்களை உள்ளடக்கிய புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் அட்டைகள் கண்காட்சியும் நடைபெற்றது.

உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி காஞ்சி கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற வரலாற்று புகைப்பட கண்காட்சி.

விழாவில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் பேசுகையில் வாழ்க்கையில் ஊறிப்போன விஷயம் பாரம்பரியம்.முன்னோர்கள் பின்பற்றிய கலாச்சாரத்தை,பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம்.பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

விழாவில் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து பேசுகையில் நாட்டின் கலாச்சார சின்னங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவே உலக அளவில் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக அளவில் காஞ்சிபுரத்தை இடம் பெறச் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் பேசினார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள ஜவுளி விற்பனை நிலையங்களில் கூட காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் விற்பனை அரங்கு தனியாக அமைக்கப்பட்டு விற்பனை நடந்து வருவதாக அஞ்சலக அதிகாரி ஜி.பாபு குறிப்பிட்டார்.

ஏற்பாடுகளை போஸ்ட் கிராஸிங் சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனர் அகில்குமார், நிர்வாகி வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் இன்று உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி இலவசமாக புரதான சின்னங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!