காஞ்சிபுரம் மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி அளித்த மனு
காஞ்சிபுரம் மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி அளித்த மனுவில் மேய்ச்சல் நிலத்தை தொழிற்சாலைக்கு கொடுக்க கூடாது என கூறப்பட்டு இருந்தது.
HIGHLIGHTS

கால்நடைக்கான மேய்ச்சல் நிலங்களை தொழிற்சாலைக்கு ஒப்படைக்க கூடாது என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தொழிற்சாலைகள் வளர்ச்சி எனக் கூறிக்கொண்டு கிராமங்களில் உள்ள கால்நடை மேச்சலுக்குக் கூட இடமில்லை எனக்கூறி புகார் அளித்த ஊராட்சி மன்ற தலைவி அன்னக்கிளி உலகநாதன் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது . இதில் பொதுமக்கள் குறை கேட்பு மனுக்களை பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் அளித்து உடனடியாக தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ரங்காடு ஊராட்சி மன்ற தலைவி அன்னக்கிளி உலகநாதன் அளித்த புகாரை படித்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அதிர்ச்சி அடைந்தார்.
அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்காடு ஊராட்சியில் மேன்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சி.எஸ்.ஆர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து போலியாக சுமார் 15 வருடங்களாக கம்பெனி கட்டிக்கொண்டு வரும் நிலையில் அதன் அருகில் உள்ள 3 ஏக்கர் மேய்க்கால் நிலத்தை சுற்றுச்சுவர் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அப்பகுதியில் மேய்ப்பதற்கான வாய்ப்பு இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் அவ்விடத்தை மீட்டு மீண்டும் கால்நடைகளுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் பரீசிலனை செய்து ஊராட்சிக்கு பெற்று தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருந்தார்.
மற்றொரு மனுவில் , வெங்காடு ஊராட்சி நிர்வாகம் பின் தங்கிய நிலையில் உள்ளதாகவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் என்எம்ஆரில் ஊராட்சி மன்ற தலைவர் கையொப்பம் இல்லாமல் எடுத்து செல்கின்றனர்.
இவை பற்றி கேட்டால் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி மற்றும் MGNNRGG அலுவலர் சாந்தி என்பவர் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறுகின்றனர் என குற்றம் சாட்டி இருந்தார்.