கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர கோரி மனு
உத்திரமேரூர் அடுத்த காரனை கிராமத்தில் கிராம நத்தம் நிலத்தினை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் மாவட்டஆட்சியரிடம் மனு அளித்தனர்.
HIGHLIGHTS

கிராம நத்தம் நிலத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுதரக்கோரி மனு கொடுக்க வந்த கிராம மக்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரனை கிராமத்தில் 50 வருடங்களாக பொது மக்கள் பயன்பாட்டில் இருந்த கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டுத் தர கோரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவரிடம் கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
அம்மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரனை கிராமத்தில் சர்வே எண் 73 இல் உள்ள கிராம நத்தமாக இருந்த இடத்தை இருவர் கிரையம் செய்ததாக கூறி பொய்யான ஆவணங்கள் மூலம் அதிகாரம் செய்து வருகிறார்கள்.
ஆனால் அந்த இடம் சுமார் 50 வருடங்களாக கிராம மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. அந்தப் பொய்யான ஆவணங்களின் மூலம் இதை தட்டி கேட்பவர்கள் மீது பொய்யான வழக்குகள் போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.
தற்போது அந்த இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளார்கள். வருவாய்த்துறை காவல்துறை தங்கள் அரசியல் மற்றும் பண பலத்தின் மூலம் சரி செய்து விட்டதாகவும், அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என ஊர் மக்கள் மத்தியில் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இது சம்பந்தமான வழக்கு ஒன்று உத்திரமேரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது மற்றும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர் வரதன் இவர்களுக்கு உடந்தையாக உள்ளார்.
ஆகையால் தாங்கள் இதனை உரிய பரிசீலனை செய்து கிராம பொது மக்கள் பயன்பாட்டிற்கும் , கிராமத்தில் உள்ள சிவன் கோவில் பெயரில் இந்த நிலத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆக்கிரமித்தவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.