மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து : தமிழக அரசு அறிவிப்பு

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து : தமிழக அரசு  அறிவிப்பு

பைல் படம்

அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவது வழக்கம்.

இதில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வருவாய் துறை, மின்சாரம் , காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை களைய கோரி மனு எழுதி அதனை பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அளிப்பது வழக்கம்.

இதில் திங்கள்கிழமை தோறும் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் வருவது வழக்கம். பொது மக்களின் மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து அவர்களுக்கு தகுந்த உதவி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் பல்வேறு வீதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதேபோல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது.

மீண்டும் அறிவிக்கப்படும் வரை ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் தங்களது குறை மனுக்களை அதில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story