தொழிலாளர்கள் போராட்டத்தால் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்

தொழிலாளர்கள் போராட்டத்தால் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்
X
தொழிலாளர்களை ஏற்றி செல்வதற்காக அரசு பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்ட காட்சி.
காஞ்சிபுரத்தில் சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்தினால் பயணிகள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் தொழிற்சாலை இந்த தொழிற்சாலையில் வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேஷன் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் 8 மணி நேர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஒன்பதாம் தேதியிலிருந்து தொழிற்சாலை அருகே உள்ள எச்சூர் கிராம நுழைவு வாயில் அருகே உள்ள தனியார் நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டத்தை கைவிடக் கோரி ஐந்து கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. தொழிற்சாலை நிர்வாகம் அவர்களின் தொழிற்சங்க அங்கீகாரம் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தது.

இந்நிலையில் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசு மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என சிஐடியு அறிவித்தது. முதல் போராட்டமாக இன்று தமிழ்நாடு முழுவதும் சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டத்திற்கு வரும் ஊழியர்களை போராட்டத்திற்கு முன்பே கைது செய்ய துவங்கி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் காவல்துறையே எதிர்பார்க்காத நிலையில் அப்பகுதிக்கு பல்வேறு பகுதிகள் வழியாக ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து குவிந்தனர். இவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இவர்களை கைது செய்ய காவல்துறை அரசு பேருந்துகளை வரவழைத்த நிலையில் திடீர் எண்ணிக்கை அதிகரிப்பால் காவல்துறை சற்று திணறி அவர்களை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்தினை மறித்து அதிலிருந்து பயணிகளை சற்றும் யாரும் எதிர்பாக்காத வகையில் அவர்களை கீழே இறக்கி விட்டனர்.

இந்த திடீர் செயலை எதிர்பாராத பயணிகள் செய்வதறியாது சாலையில் நின்றதும் சிலர் கைக்குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த போராட்ட இடத்தில் ஸ்தம்பித்து நின்றனர்.

இந்நிலையில் சில காவலர்கள் அவர்களை ஓரமாக நிற்கும்படியும் விரைவில் அந்த பேருந்து வரும் அதில் பயணிக்கலாம் எனவும் இல்லை என்றால் அப்பகுதிக்கு சற்று தள்ளி சென்றால் வேறு சில பேருந்துகளும் வரும் எனவும் தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

பணம் செலுத்தி பயணித்த பயணிகளை தங்கள் தேவைகளுக்காக நடுவழியில் இறக்கி விட்ட காவல்துறையின் செயல் அதிர்ச்சி அளித்ததும் , சரியான திட்டமிடல் இல்லாததால் இதைப் பார்த்த பலருக்கு மன வருத்தத்தையும் அளித்தது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!