முருகன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருக்கோயில் முன்பு குடமுழுக்கு விழாவிற்கான முதல் கட்ட பணியாக பந்தக்கால் நடப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த இளையனார் வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பணிகள் நிறைவுற்று வரும் டிசம்பர் 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
கலியுக வரதனாம் கந்தப்பெருமான் திருக்கோயில் கொண்டு விளங்கும் தலங்கள் பல. அவற்றுள் இளையனார் வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தொண்டை நாட்டின் காஞ்சி மாநகருக்கு தெற்கில் சேயாற்றின் வடகரையில் கடம்பவனம் சூழ்ந்த மிகத் தொன்மை வாய்ந்த சிறப்பு பெற்ற தலமாகும்.மகான் சுவாமிநாத சுவாமியார் ஜீவன் முக்தி அடைந்த திருத்தலம்.அருணகிரிநாதர் முருகனை தரிசித்து 2 திருப்புகழ் பாடல்கள் பாடப்பெற்ற தலமாகும்.திருமுருக கிருபானந்த சுவாமிகள் அவர்களால் முன்னின்று குடமுழுக்கு விழா நடத்திய திருத்தலமாகும்.
மலையன் , மாகறன் ஆகிய அரக்கர்களை வென்ற முருகனுடைய திருக்கைவேல் ஊன்றிய தனித்தலமாகும். வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்கொடுக்கும் பிரார்த்தனை தலமாகும்.கம்பீரமான இராஜகோபுரத்துடன் மற்றும் திருக்குளத்துடன் பூரண கோயில் அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது.மூன்று கால பூஜையும். சித்திரையில் பெருவிழாவும் நடைபெறுகிறது .இப்படி இதன் பெருமைகள் சிறப்புகள் பலப்பலவாகும்.
இத் திருக்கோயில் திருப்பணி கடந்தாண்டு துவங்கப்பட்டு அவை இப்போது சீராக முடிக்கப் பெற்று, நிகழும் திருவள்ளுவர் ஆண்டு (க்ரோதி ஆண்டு) கார்த்திகை மாதம் 20ம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தி திதி, உத்திராடம் நட்சத்திரம்,சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் தனுசு லக்கினத்தில் காலை7-30 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்ளாக திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா சிறப்பாக நடைப்பற உள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் இன்று பந்த கால் நடும்விழா அதிகாலை ஆறு மணி அளவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன், அறங்காவலர்கள் விஜயன் , மன்னா பாய் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன், திருக்கோயில் ஊழியர்கள், கிராம பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பந்தக்காலுக்கு சிவாச்சாரியார் வேதகிரி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு ராஜகோபுரம் முன்பு வந்த கால் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது.
மேலும் திருக்கோயில் அறங்காவலர் குழு சார்பாக குடமுழுக்கு விழாவில் அன்பர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு வந்து திருக்குடமுழுக்கு விழாவினைக் கண்டும் தரிசித்து முருகனின் திருவருள் பெற்றுய்ய அழைப்பதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu