புதிய மர திருத்தேர் செய்யும் பணியினை எம்பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்..!

புதிய மரத் தேர் செய்யும் பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ சுந்தர் , உடன் எம்.பி.செல்வம், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி, இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழு தலைவர் தியாகராஜன்.
காஞ்சிபுரம் அடுத்த புத்தகரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு முத்து கொளக்கியம்மன் திருக்கோயிலுக்கு ரூபாய் 28.40 லட்சம் மதிப்பீட்டலான புதிய மரத் தேர் செய்யும் பணியினை சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் இணைந்து துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு முத்து கொலக்கியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கிராம பொதுமக்களுக்கு குலதெய்வமான இத்திரு கோயில் இந்து சமய அறநிலைத் துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
வருடம் தோறும் ஆடி மாதம் பத்து நாள் பிரமோற்சவம் இத்திருக்கோவில் நடைபெறும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோயிலின் ஆடி பிரமோற்சவ தேரோட்டம் நிறைவு பெற்ற நிலையில் தேர் சிதலமடைந்தது.
இந்நிலையில் , இக்கிராம பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் , இந்து சமய அறநிலைத்துறை சார்பில் புதிய திருத்தேர் அமைத்து தர பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த 2024ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் இத்திருகோயிலுக்கு புதிய திருத்தேர் திருப்பணி செய்யும் பணிக்கு ரூபாய் 28.40 லட்சத்தில் பொதுநல நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் கிராமப்புற திருப்பணி திட்டத்தின் கீழ் திருக்கோவிலுக்கு முன் மண்டபம் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய திருத்தேர் செய்யும் பணி துவக்க விழா நிகழ்வு திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இத்திருப்பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் இணைந்து சிறப்பு பூஜைகளுக்கு பின் பணிகளை துவக்கி வைத்தனர்.
இத்திருத்தேர் குறித்து ஸ்தபதி அருண் கூறுகையில் , 27.3 அடி உயரமும் , 10 அடி அகலம் , நான்கு அடுக்குகள் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. தொண்டை மண்டல திருக்கோவிலுக்கு செய்யும் வடிவிலேயே இத்திருத்தேர் நான்கு சக்கரத்துடன் ஆறு மாதத்தில் இப்பணி நிறைவு பெறும் . மேலும் இத்திருக்கோயிலின் வரலாறை கூறும் வகையில் சிற்பங்களும் திருத்தேரில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சிதலமடைந்த ஐந்து திருக்கோயில்களில் இதுபோன்று திருத்தே திருப்பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழு தலைவர் தியாகராஜன் , இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கருணாநிதி , ஆய்வர் திலகவதி , ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுமார் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் அறநிலையத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu