சாலையில் கிடந்த முதியவரை மீட்டு மருந்து அளிக்க டிஆர்பி ராஜா உத்தரவு

சாலையில் கிடந்த முதியவரை மீட்டு மருந்து அளிக்க டிஆர்பி ராஜா உத்தரவு
X

பூங்கா சாலையில் கிடந்த முதியவரிடம் குறைகளை கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.

மனித நேயத்துடன் செயல்பட வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அறிவுரை வழங்கினார்.

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் ‌டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான தமிழ்நாடு சட்டபேரவை மதீப்பீட்டு குழுவின் 20பேர் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் ஆய்வு செய்தனர்.

அப்போது, பூங்கா 30 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் பூங்காவில் மின்சாதன பெட்டி திறந்த நிலையில் இருந்து இருப்பதை கண்டு ஊழியர்கள், ஓப்பந்ததாரரை கண்டித்தனர். ஆய்வு முடிந்து வெளியே வந்தபோது, பூங்கா நடை பாதை மேடையில் காலில் கட்டுடன் முதியவர் ஒருவர் படுத்திருந்தார்.

இதனை கண்ட சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா. அவரிடம் சென்று உடல் நலம் விசாரித்தார். அப்போது போதிய வசதி இல்லை என்றும், ஆதரவு இல்லை என்றும், அவர் தெரிவித்தார். உடன் இருந்த காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனிடம், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

அங்கிருந்து நகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்களிடம், மனித நேயத்துடன் மக்களுக்கு உதவுங்கள் என கேட்டுக் கொண்டார். உடனடியாக அவரை நகராட்சி ஊழியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் பல நாட்களாக அங்கு காலை மாலை என அங்கேயே தங்கி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்தும், எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று முதியவர் மீட்கப்பட்டார்.

Tags

Next Story