128 நிறுவனங்கள் பங்கேற்ற பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாம்.

128 நிறுவனங்கள் பங்கேற்ற பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாம்.
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வான நபருக்கு மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் பணி நியமன ஆணை வழங்கிய போது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு துறை அலுவலகம் ஒருங்கிணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாமினை பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடத்தியது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த்திய சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர்கலைச்செல்வி மோகன், குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

பின்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்கள். முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்து பேசியதாவது:

படித்த இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு வகைகளில் பெரும் பங்காற்றி வருகிறது. அரசு வேலை பெற விரும்பும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் " நான் முதல்வன் சிறப்பு திட்டம்" மூலம் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் மூலம் அரசு வேலை பெற வழிவகை செய்கிறது.

சுயமாக தொழில் தொடங்கி முன்னேற விரும்புபவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் UYEGP, PMEGP, NEEDS, AABCS உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கடனுதவி அளிக்கப்பட்டு சுயத்தொழில் தொடர்பாக வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இதில் AABCS என்று சொல்லப்படுகின்ற "அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் ஸ்கீம்" தற்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சரால் பட்டியலினத்தவருக்கான தொடங்கப்பட்ட சிறப்பு திட்டம். தனியார் துறைகளில் வேலை பெற விரும்புவோருக்கு சிறிய மற்றும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, அதில் முன்னணி தனியார் நிறுவனங்களை பங்கு பெற வைத்து வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 128 தனியார் நிறுவனங்கள் காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தவிருக்கின்றது.

இம்முகாமினை 8 அம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை முடித்த தகுதியான இளைஞர்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும், இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து வேலை நாடுநர்களுக்கும் வேலை கிடைக்க தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இம்முகாமில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மகளிர் திட்ட இயக்குநர் கவிதா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் துணை இயக்குநர், அருணகிரி, பச்சையப்பன் மகளிர் கல்லூரி பணியமர்த்தும் அலுவலர் நஜ்மா, அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவன அலுவலர்கள், வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story