பரபரப்பான சூழ்நிலையில் உதயநிதிக்கு பேனா சிலை அளித்த காஞ்சி மேயர்
பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் பேனா சிலை நினைவு பரிசு வழங்கிய போது.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஒட்டு மொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது.
இதற்கு பல்வேறு தரப்புகள் வரவேற்பையும் சில தரப்புகள் எதிர்ப்பையும் தெரிவித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, பெரும் சர்ச்சையை எழுப்பியது. தமிழக அரசு அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு பேனா சிலை அமைக்கப்படும் என உறுதியாக தெரிவிக்கிறது.
இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.ஸ்ரீபெரும்புதூரில் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பூ மாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட கடையை திறந்து வைத்தார்.
அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகள் திருமணத்தை நடத்தி வைத்த பின் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்தார்.அமைச்சரான பின் முதல்முறையாக காஞ்சிபுரம் வருகை புரியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்ணா நினைவு இல்லம் சென்று அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதன் பின் அங்குள்ள குறிபேட்டில் அமைச்சரான பின் முதல் முறையாக காஞ்சிபுரம் வந்து மரியாதை செலுத்தியதாகவும் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம்கலைஞர் புகழ் ஓங்குக தலைவர் வாழ்க என எழுதி கையெழுத்திட்டார்.
அண்ணா இல்லத்திற்கு வந்த அவரை காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் இணைந்து அவருக்கு பேனா சிலை நினைவு பரிசாக வழங்கினர்.இன் நிகழ்ச்சியின் போது அமைச்சர் அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் மாலிக் , மாநகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுக உடன் இருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu