காஞ்சிபுரத்தில் தொற்று நோய் பரவலை தடுத்த சுகாதார துறையினருக்கு பாராட்டு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆனதையொட்டி க.சுந்தர் எம்.எல்.ஏ. லோகோ வெளியிட்டார்.
கடந்த 1922 ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை தற்போது நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் அத்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.வருமுன் காப்போம் என்ற உயரிய நோக்கத்தோடு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இன்றளவும் இயங்கி வருகிறது.
பெரியம்மை , போலியோ , கருங்காய்ச்சல் போன்ற நோய்கள் தற்போது ஒழிக்கப்பட்டன .உலகையே அச்சுறுத்திய கொரோனா நோய்க்கு தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கை மூலம் கட்டப்படுத்தப்பட்டு தமிழகம் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளது.தமிழகத்தில் முதன் முதலில் நூறு சதவீத தடுப்பூசி செலுத்திய மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் என்பது இத்தருணத்தில் பெருமைக்குரியதாக உள்ளது.
மேலும் கடந்த நூறு ஆண்டுகளில் தாய் சேய் இறப்பு விகிதக் குறியீடுகள் தேசிய அளவில் தற்போது சிறப்பான நிலையை எட்டி உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் தாய் இறப்பு விகிதம் 14.2 மற்றும் சேய் இறப்பு விகிதம் 7.9 ஆக குறைந்துள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மக்கள் சேவையில் 100- ஆண்டுகள் காணுவதையொட்டி தொடர் ஜோதி வரவேற்பும் கொண்டாட்டங்களும் காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது .
உத்தரமேரூர் எம்.எல்.ஏ. க. சுந்தர் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பொது மருத்துவ துறையின் சிறப்புகளையும் பொது மருத்துவ துறை பங்காற்றிய விதங்களையும் பாராட்டி சிறப்பாக எடுத்துக் கூறினார். மேலும் எளிதில் பரவக்கூடிய தட்டம்மை , பெரிய அம்மை போன்ற நோய்களை ஒழித்ததில் பொது சுகாதாரத் துறையின் பங்கு மகத்தானது என்று பாராட்டினார். கொரோனோ காலத்தில் நோய் பரவலை தடுத்ததில் பெரும் பங்காற்றியது பொது சுகாதாரத்துறை என்று பாராட்டி பேசினார்.
5- வட்டாரங்களில் பணியாற்றிய 345 பேருக்கு நற்சான்றிதழ் பரிசுகளை வழங்கினார். ஓய்வு பெற்ற பொது சுகாதாரத்துறை துறை ஊழியர்கள் 17 சான்றுகளை வழங்கி பாராட்டினார்
இவ்விழாவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியா ராஜ் வரவேற்பு பேசினார். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வட்டார மருத்துவர்கள் அருள்மொழி, உமாதேவி, முருகன், ஜெய்சங்கர், சியாம் மற்றும் மருந்தாளர் பழனிவேலன், ரமேஷ், டி.எம். ஓ மணிஷ்வர்மா உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எம்.எல்.ஏ. க. சுந்தர் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu