காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா துவக்கம்

காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா துவக்கம்
X

காஞ்சிபுரத்தில் இன்று புத்தக திருவிழாவை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேசினார்.

காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா இன்று துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மதியம் 3 மணி அளவில் காஞ்சிபுரம் புத்தக திருவிழா 2022 ஐ தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் , சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

துவக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேசுகையில் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் புத்தக கண்காட்சித் திருவிழாவிற்கு வருகைப் புரிந்திருக்கும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வரவேற்கிறேன் .

புத்தகங்கள் ஒரு மனிதனை சிந்திக்கவும், அறிவை விருத்தி செய்வதற்கும், அகண்டம் ஆக்கவும், தன்நிலையில் இருந்து உயர்த்தவும், பார்க்க முடியாத உலகத்தை பார்ப்பதற்கும், காணாத மனிதர்களை காண்பதற்கும், அறிவு சார் செய்திகளை அறிந்து கொள்வதற்கும், பல்வேறு கண்டுப்பிடிப்புகளை தெரிந்துக் கொள்வதற்கும், கடந்த கால வரலாற்றை உணர்ந்து செயல்படுவதற்கும், உறுதுணையாய் இருக்கின்றன.

புத்தகங்கள் இல்லையேல் தொல்காப்பியர் காலத்தையும், தொல்காப்பியனின் இலக்கணங்களையும், ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும், மில்டனின் கவிதை நடையையும், பெர்னாட்ஷாவின் தத்துவத்தையும், கார்ல்மார்க்ஸின் மக்கள் சித்தாந்தத்தையும், ராகுல் சாகித்யாவின் நாகரிக வளர்ச்சியையும், அறிஞர் அண்ணாவின் இலக்கிய நயத்தையும், கலைஞர் கருணாநிதியின் சங்கத் தமிழையும் அறிந்திருக்க முடியாது.

எனவேதான் பாரதிதாசன் படி, படி, படி, படி, படி நூலைப் படி சங்கத் தமிழ் நூலைப் படி என்று சொன்னார்

புத்தகங்கள் படிப்பதற்கு காலமோ, நேரமோ, வேளைகளோ கிடையாது. நம்மை எழுச்சிப் பெற வைக்கும் புத்தகங்களைப் படிப்போர் அத்தனை பேரும் விரிந்த அறிவுடையவர்களாக, தெளிந்த ஞானம் பெற்றவர்களாக, சமுதாயத்தோடு ஒன்றிணைந்தவர்களாக, எதனையும் சாதிப்பவர்களாக இருப்பதை காண முடிகிறது.

எனவேதான் கற்க தொடங்கிய நாள் முதல் வாழ்வின் இறுதி காலம் வரை நம்முடன் வருபவை நாம் படித்த புத்தகங்களின் எண்ணங்களே.

தொட்டனைத் தூறும் மலர்க்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற வள்ளுவனின் வாக்கின்படி அனைவரும் கல்வி கற்று கல்விச் சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப அனைத்து வகையான புத்தகங்களை பயின்று எந்தப் போட்டித் தேர்வுக்கும் அஞ்சாமல், எல்லா வேலை வாய்ப்பிற்கான தேர்விலும் பங்கு கொண்டு அனைவரும் உயர் பணிகளை பெற்று உயர வேண்டும் என்பதற்காகவே இப்புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.

தென்னிந்திய புத்தகப் விற்பனையாளர்கள் சங்கம் , பதிப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் முதலாவது புத்தகத் திருவிழாவில் 125 அரங்குகளில் சுமார் 50,000 தலைப்புகளில் பல இலட்சக் கணக்கான புத்தகங்கள் ஒரே அரங்கில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் கலை, இலக்கியம், வரலாறு, சரித்திரம், சமூகம் மற்றம் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடைய தலைச்சிறந்த புத்தகங்கள் கவிதைகள், கட்டுரைகள், தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், fiction and non-fiction போன்ற தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்திருவிழாவில் மத்திய மாநில அரசினுடைய போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. இத்திருவிழாவில் 10 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திருவிழாவில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படவுள்ளது.

எனவே வாருங்கள், புத்தகங்களை பாருங்கள், வாங்கிப் பயன் அடையுங்கள், உயர்வடையுங்கள், மகிழ்ச்சியான அறிவுசார் உலகைப் படையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!