காஞ்சிபுரம்: 80 அரசு பள்ளி பழங்குடியின மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி

ஓரிக்கை ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக 80 பழங்குடி சிறுமியர்களுக்கு 30 நாட்கள் தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மிதுன் மிட்டல் அறிவுரையின் பேரில் , காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் சண்முகம் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை அவர்களுக்கு வழங்கிய அறிவுரைப்படி "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் "ஒரிக்கை மற்றும் ஏகனாம்பேட்டை” அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் பழங்குடி இனத்தை சேர்ந்த 80 பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே, சிலம்பம் மற்றும் திறன்மேம்பாடு பயிற்சி 10.07.2024-ம் தேதி முதல் 10.08.2024ம் தேதி வரை 30 நாட்கள் அளிக்க திட்டமிட்டு நேற்று துவக்க விழா நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் தற்காப்பு பயிற்சி மட்டுமின்றி பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு வீடியோ படத் தொகுப்பினை ஒளிபரப்பி பழங்குடியினர் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் இந்த இரு பள்ளிகளிலும் மாலை 3 மணி முதல் நான்கு பதினைந்து வரை மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் தொடக்கப் பயிற்சிகள் ஓரிரு நாட்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு அதன் பின்பு தொடர்ச்சியாக கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சிகள் அளிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் பிரபாவதி, சோமசுந்தரம், சுப்பிரமணி, சிறுவர் உதவி மைய உறுப்பினர் அமுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் சுசிலா, உதயகுமார் தினகரன், ஏகனாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுணாதேவி மற்றும் ஓரிக்கை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu