தேசிய அளவிலான ஏர் ரைபிள் போட்டி: மூன்று தங்கம் ஒரு வெள்ளி வென்ற காஞ்சி வீரர்கள்

தேசிய அளவிலான ஏர் ரைபிள் போட்டி:  மூன்று தங்கம் ஒரு வெள்ளி வென்ற காஞ்சி வீரர்கள்
X

தேசிய அளவிலான ஏர் டைட்டில் போட்டியில் காஞ்சியைச் சேர்ந்த 3 வீரர்கள் தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று பதக்கங்கள் பெற்றபோது உடன் பயிற்சியாளர் பாபு.

டெல்லி காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 15 மாநிலங்களை சேர்ந்த 300 போட்டியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் காஞ்சி ஏர் ரைபிள் அகடமி வீரர்கள் 3 தங்கம் ஒரு வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு துறையில் அதிக நாட்டம் கொண்டு பல்வேறு விளையாட்டுகளை தேர்வு செய்து அதில் சிறப்பு பயிற்சிகளை பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் விளையாட்டின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு கூடுதல் சிறப்பு தகுதி கிடைப்பதால் பெற்றோர்களும் இதனை அதிகளவில் ஊக்குவித்து வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மடம் தெரு, அறிஞர் அண்ணா பூங்கா எதிரில் அமைந்துள்ளது காஞ்சி ஏர் ரைபிள் அகாடமி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் துப்பாக்கி சுடுதல் குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் நடைபெற்றது.

இதில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் 12 வயது முதல் 16 வயது வரையும், 20 வயதுக்கு மேற்பட்டோர், பெண்கள் பிரிவு என ஏழு பிரிவுகளில் 14 வகையான போட்டிகள் நடைபெற்றது.

இதில் தமிழகம் சார்பாக 45 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் காஞ்சி ஏர் ரைபிள் அகாடமி சார்பில் பயிற்சியாளர் பாபு தலைமையில் நான்கு வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் , 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் சஞ்சய், 21 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சுரேஷ், பெண்கள் பிரிவில் ஷோபனா என மூவரும் தங்கப் பதக்கம் பெற்றனர்.

இதேபோல் 20 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் டாக்டர்.செந்தில்குமார் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஆறு வயது உடைய முதலாம் வகுப்பு மாணவன் நித்திஷ் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story