கேசரி செய்வது கஷ்டமா? சத்துணவு ஊழியர்களிடம் காஞ்சிபுரம் ஆட்சியர் கேள்வி

கேசரி செய்வது கஷ்டமா? சத்துணவு ஊழியர்களிடம் காஞ்சிபுரம் ஆட்சியர் கேள்வி
X
கேசரி தயாரிக்க மறுத்த சத்துணவு ஊழியர்கள் மத்தியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசினார்.
கேசரி செய்வது அவ்வளவு கஷ்டமா? என சத்துணவு ஊழியர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேள்வி கேட்டார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் காலையில் புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கிய உணவை உண்ணும் வகையில் மாநகராட்சிகளில் முதல் கட்டமாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அவ்வகையில் மாநகராட்சியில் உள்ள துவக்கப் பள்ளிகளில் தற்போது வரை காலை உணவு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திட்டம் விரிவுபடுத்தும் நோக்கில் அனைத்து துவக்க பள்ளிகளிலும் தமிழக முழுவதும் நாளை முதல் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்து அதற்கான பணிகளை துவக்க உத்தரவிட்டார்.

இதற்காக புதிய சமையலறை கூடம் மற்றும் பழைய கட்டுப் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களில் இருந்த நிதிகள் இதற்கு ஒதுக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை திட்டம் துவக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் தாலுகாவில் 54 நடுநிலைப் பள்ளிகளும் , வாலாஜாபாத் வட்டத்தில் 95 துவக்க பள்ளிகளும், உத்திரமேரூர் 116 துவக்கப் பள்ளிகளும், குன்றத்தூரில் 77 துவக்கப் பள்ளிகளும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 96 துவக்கப் பள்ளிகள் என மொத்தம் 438 பள்ளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் துவக்க நாள் என்பதால் பள்ளிகளில் இனிப்புடன் கூடிய உணவு வழங்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் இது குறித்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.


இனிப்புகள் தயார் செய்ய அந்தந்த பள்ளி சத்துணவு ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இத்தகவலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்துணவு ஊழியர்களிடம் தெரிவித்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதை திரும்ப பெற வேண்டும் எனக் கூறி இன்று மாலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை மனு அளித்து கோரிக்கையை தெரிவித்தனர்.

இன்று ஒரு நாள் மட்டும் இதை மேற்கொள்ள தான் அறிவுரை அளித்ததின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உங்களை அழைத்துள்ளது உண்மை எனவும் குழந்தைகளுக்காக முதல் நாள் இதை தயார் செய்து அளிக்கவும் என தெரிவித்தார்.

இதற்கு சத்துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் மறுத்தபோது இதனை தயார் செய்ய என்ன பெரிய கஷ்டம் உள்ளது. வீட்டிற்கு திடீரென குடும்ப உறுப்பினர்கள் வந்தால் இதனை செய்ய மாட்டீர்களா ? இதற்கான செலவு அனைத்தையுமே அரசு தான் ஏற்கிறது எனவும், தயார் செய்ய இது ஓன்றும் கடினமான உணவு அல்லவே ? என தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் இதில் பணியாற்ற விருப்பம் இல்லை என்றால் அது குறித்து ஒரு மணி நேரத்தில் தகவல் தெரிவித்தால் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள இயலும் என்றும், குழந்தைகளுக்காக கூட இதை செய்ய இயலவில்லை என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அப்பகுதியில் இருந்ததால் அவரும் அவர்களிடம், குழந்தைகளுக்காக மன மகிழ்ச்சியுடன் செய்து இனிப்பு வழங்குங்கள் என கேட்டுக்கொண்டார்.

கேசரி செய்வது அவ்வளவு கஷ்டமா என பெண்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டபோது வந்திருந்த பெண்மணிகள் ஒருவர் கூட அதற்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருந்தனர்.

Tags

Next Story