காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் துவக்கம்

வடகிழக்கு பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வேகவதி ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை வரும் அக்டோபர் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு இந்த பருவமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் நகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு , மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி நிரம்பி உபரி நீர், வேகவதி ஆற்றின் வழியாக காஞ்சிபுரம் நகரில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளநீர் அதிக அளவில் சென்ற நிலையில் கரையோரம் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்ட பின் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழைக்கும் முன்பு வேகவதி ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்றி தங்கு தடை இன்றி நீர் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியாக வேகவதி ஆற்றில் வளர்ந்துள்ள செடிகளை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வரும் பணி துவங்கியுள்ளது.
கடந்தாண்டு ஏற்பட்ட வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தில் வேகவதி ஆற்றில் உள்ள சிறு பாலங்கள் அனைத்தும் உடைந்து சேதம் அடைந்த நிலையில் தற்போது அதில் இரு பாலங்கள் புனரமைக்கப்பட்டு, தற்போது நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேகவதி ஆற்றில் முதல் கட்ட பணி துவங்கி உள்ள நிலையில் தொடர்ந்து காஞ்சிபுரம் நகர் முழுவதும் நீர் தேங்கும் பகுதிகளில் மாநகராட்சி பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணிகளை துவங்கி செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu