மகளிர் தின விழா கொண்டாட உரிமை உள்ள கட்சி அதிமுக மட்டுமே
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய மாநில செயலாளர் பரமசிவம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்றதால் அப்போது கொண்டாட முடியாததால் தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் மாவட்ட செயலாளர் வி. ஆர் . மணிவண்ணன் தலைமையில் ஏகாம்பரநாதர் சந்நிதி தெரு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் , அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் பழனி, அம்மா பேரவை செயலாளர் கே. எஸ். சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், இளைஞர்க ளுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, பெண்களுக்கு தையல் இயந்திரம், இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் , தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக சிறப்பான ஆட்சி செய்து பொதுமக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வந்தது.தற்போது திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களை வஞ்சித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்ற இயலாமல் திணறி வருகிறது.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் முறையில் அனைத்து அதிமுக மகளிர் அணிகளுக்கும், தமிழகப் பெண்களுக்கும் இன்று அதிமுக சார்பில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கென முதல்வர் ஜெயலலிதா , பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருந்தார்.
தாலிக்கு தங்கம் திட்டம் , பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம், பாலூட்டும் அறை, மகப்பேறு திட்டங்கள் என பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருப்பதும் தற்போது அதனை மாற்றி மக்களை ஏமாற்றும் வகையில் திட்டங்களை திமுக அறிவித்து வருவது கண்டனத்துக்குரியது.மகளிர் தின விழா கொண்டாட உரிமையுள்ள ஒரே கட்சி அதிமுக எனவும் மற்ற கட்சிகள் அதனை கொண்டாட தகுதியற்றது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பேரூர் நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu