காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மாகரல் கிராம விவசாயிகள் மாவட்ட வருவாய் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாகரலில் இயங்கி வரும் கல் குவாரி மற்றும் எம் சாண்ட் அரவை நிலையங்களால் சுற்றுச்சூழல் , விவசாயம் பாதிக்கப்படுவதை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டதால் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரிகள் மற்றும் குளங்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர விவசாயத்தை இன்றளவும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கல் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் இத் தொழிற்சாலையில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் 24 மணி நேரமும் கிராம வீதிகள் வழியாக செல்வதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு , உணவருந்த கூட முடியாமலும் , வீதியில் நிற்கக்கூட இயலாது வீடுகள் முழுவதும் அடைக்கப்பட்டு அகதிகள் போல் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். விவசாய பாசன கால்வாய்கள் அனைத்தும் கழிவுகளால் அடைப்பட்டு விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவது குறித்து பலமுறை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினை பற்றி விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பேச அனுமதிக்காததை கண்டித்தும், தங்கள் குறைகளை மாதம்தோறும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மாவட்ட வருவாய் அலுவலரை விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தியும் தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் எங்களை நீங்கள் சமாதானப்படுத்த வேண்டாம், இது போன்ற கூட்டங்களில் தான் நாங்கள் இதை தெரிவிக்க முடியும். தனிப்பட்ட முறையில் எங்களை கவனிப்பதற்கு ஆள் இல்லை எனவும் தெரிவித்து அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா எவ்வளவோ சமாதானம் கூறியும் விவசாயிகள் அமைதி அடையாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விவசாய நலன் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை படம்பிடிக்க வந்த நிருபர்களை கூட அவர்கள் கோபத்துடனே பேசினர். இதனால் கூட்டரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் , சுற்றுச்சூழல் மற்றும் விவசாய பாதிப்பு குறித்து பலமுறை அரசு அதிகாரிக்கு மனு அளித்தும் இது குறித்த எவ்வித மாறுபாடும் தெரியவில்லை .தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு அதிகாரிகள் முன்னுக்குப் பிறகு தகவல்களை அளித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் குவாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கேள்விகளுக்கு அரசு அதிகாரிகள் முரண்பாடன எண்ணிக்கையில் தகவல் தெரிவிப்பது அவர்கள் பணியை செய்வதில்லை என்பதையே காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu