சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்த ஏகனாபுரம் மக்கள்.

சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்த ஏகனாபுரம் மக்கள்.
X

ஏகனாபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வருகை தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் என பலர் அமர்ந்திருந்த போது.

பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வருகை தராததால் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.ஏற்கனவே 6 முறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும்,5 முறை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று 6-வது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.

கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கும் கிராம மக்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போராட்டக் குழுவினர் கோரிக்கை.

சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்து சுற்று வட்டார 20 கிராமப்புறங்களை உள்ளடக்கி உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள் விலை நிலங்கள் நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கி பேரணி, டிராக்டர் பேரணி என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 589 வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் நடைபெற்ற ஆறு கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றியும்,5 கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.

இந்நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் கிராம மக்கள் புறக்கணித்திருந்தனர்.


அதனை தொடர்ந்து இன்று ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் யாரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒருமனதாக புறக்கணிப்பு செய்தனர்.

ஊராட்சி மன்ற நிர்வாகம்,அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழு செயலாளர் சுப்பிரமணியன், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ள கிராம மக்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் மீண்டும் மீண்டும் வந்து கிராம சபை கூட்டத்தை நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைத்த நடவடிக்கை கைவிடாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் வேறு வகையான போராட்டங்களை நடத்துவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

போராட்ட களத்தில் முன் நின்று நடத்துவதால் தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் அரசு மதுபான கடை மேற்பார்வை பணியாளர் பணியில் இருந்து இட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விமான நிலையம் அமைக்கப்படாது என்ற அறிவிப்பு வரும் வரை கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags

Next Story