திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இரு சக்கர வாகன பேரணி
திராவிடர் கழகம் சார்பில் காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகே நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மற்றும் விளக்கக் கூட்டம் நடைபெற்ற போது
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம் கடந்த 11ஆம் தேதி துவங்கியது.
மாணவரணி மற்றும் இளைஞர் அணி அமைப்பினர் ஐந்து குழுக்களாக பிரிந்து பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகன பரப்புரை பயணம் மற்றும் கண்டனக் கூட்டங்களை கடந்த மூன்று தினங்களாக நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் முரளி, செயலாளர் இளையவேல் ஆகியோர் தலைமையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் மற்றும் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசினை வலியுறுத்தி விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த விளக்க பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக துணை பொது செயலாளர் மதிவதனி கலந்துகொண்டு நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்து குறித்த விளக்க உரை பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எடுத்துரைத்தார். மேலும் இது குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழக மாநில நிர்வாகிகள் எல்லப்பன் , கதிரவன் , திமுக பேச்சாளர் நாத்திகம் நாகராஜன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் நாதன், நிர்வாகிகள் அன்பு யோகேஷ், விசிக கட்சியை சேர்ந்த மதிஆதவன், மக்கள் மன்றத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் கம்யூனிஸ்ட் திராவிடக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் இருசக்கர வாகன பரப்புரையும் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu