தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை 2024 முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் ,

கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை, 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகள் , 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள் , 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்ட 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் .

மேலும் துறை வாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக சம்மந்தப்பட்ட 11 துறைசார்ந்த அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் விரைவில் முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மழைநீர் வடிகால்கள் , பாலங்கள் ஆகியவற்றை தூர் வாரும் பணி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் சுத்தம் செய்யும் பணி, மழைநீர் வடிகால்கள் அமைத்தல், விரிவுபடுத்துதல், உபரி நீர் கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றினை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிருவாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் வீரர்கள், ஏறுபவர்கள், அப்தத்ரா தொண்டர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் என்ஜிஓக்கள் ஆகியோர்களையும் தயார் நிலையில் வைத்திட அறிவுறுத்தினார்.

மேலும், தென்மேற்கு பருவ மழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இந்தஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!