தமிழகம் முழுவதும் 43 பயிற்சி பள்ளிகளில் காவலர்களுக்கு பயிற்சி நிறைவு

தமிழகம் முழுவதும் 43 பயிற்சி பள்ளிகளில் காவலர்களுக்கு  பயிற்சி நிறைவு
X

 222 காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் அணிவகுப்பு மரியாதை ஏற்ற கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ். 

தமிழகம் முழுவதும் 43 பயிற்சி பள்ளிகளில் காவலர்கள் அடிப்படை பயிற்சியை நிறைவு செய்துள்ளனர் என்று கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் கூறினார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்ற காவலர்களுக்கு 43 காவலர் பயிற்சி பள்ளிகள் மூலம் கடந்த ஏழு மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 222 காவலர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டது. இதில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்ற ஒருவரும், முதுகலை பட்டப்படிப்பு பெற்ற பத்து நபர்களும், பொறியியல் இளங்கலை பட்டம் பெற்ற 52 பேரும், இளநிலை பட்டப்படிப்பு படித்த 101 பேரும், பட்டய படிப்பு முடித்த 28 பேரும் என மொத்தம் 222 காவலர்கள் பயிற்சி பெற்றனர். காவலர் பயிற்சி பள்ளியில் காவலர்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகளும், அவ்வப்போது அதற்கான தேர்வுகளும் நடைபெற்றன. அதோடு நீச்சல் பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி, முதலுதவி பயிற்சி, தீயணைப்பு பயிற்சி, கமாண்டோ பயிற்சி மற்றும் பல இதர பயிற்சிகளும் தொடர்ச்சியாக அவர்களுக்கு அளிக்கப்பட்டன.

காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசு காஞ்சிபுரம் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செவ்வாக்கிழமை மாலையுடன் காவலர்களுக்கு பயிற்சி நிறைவு பெறுவதை யொட்டி பயிற்சி நிறைவு விழா காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி முதல்வரும், காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான எம்.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூடுதல் டி.ஜி.பி.யும், தாம்பரம் காவல் ஆணையாளருமான அமல்ராஜ் கலந்து கொண்டு பயிற்சிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த காவலர்களுக்கு பதக்கங்களையும், நற்சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக பயிற்சி பெற்ற காவலர்கள் அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற 222 காவலர்களும், பயிற்சி பள்ளி முதல்வர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன் காவல்துறை உறுதிமொழி கூற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மேலும் கவாத்து பயிற்சி, சட்ட வகுப்பு பயிற்சி, இலக்கு சுடும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளில் சிறந்து விளங்கிய முதல் மூன்று காவலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து காவலர்கள் தங்களது தனித்திறமை மற்றும் குழு திறமைகளை கலை நிகழ்ச்சிகளாக நடத்தி காட்டினர். பாரம்பரிய கலைகளான கராத்தே மற்றும் சிலம்பம் நடத்திக் காட்டினர். இறுதியாக பள்ளி துணை முதல்வர் நன்றி கூறினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி.கள், ஆய்வாளர்கள், காவலர் பயிற்சி பள்ளி பயிற்றுநர்கள், காவலர்களின் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

விழா நிறைவு பெற்றபின் செய்தியாளிர்களிடம் பேசிய கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் , தமிழகம் முழுவதும் 43 காவலர் பயிற்சி பள்ளிகளில் காவலர்கள் அடிப்படை பயிற்சியை நிறைவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து ஒரு மாத பயிற்சி நிறைவு பெற்ற பின் காலி பணியிடங்களை பொருத்து பல்வேறு பிரிவுகளில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

Tags

Next Story