காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆணையர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மேயர் மகாலட்சுமி, துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் செந்தில் முருகன்.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையரை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்களும், வணிக நிறுவனங்களுக்கு வரி தள்ளுபடி செய்ததை கண்டித்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாதாந்திர கூட்டம் இன்று அறிஞர் அண்ணா அரங்க கூட்டரங்கில் மேயர் மகாலட்சுமியுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் உள்ளிட்ட 51 உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வழக்கம்போல் கூட்டத்தை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் திருக்குறள் வாசித்த பின் கூட்டம் தொடங்கலாம் என மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவித்தார்.
அப்போது 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்களுடன் ஆணையரை சந்திக்க முயன்ற போது , மாமன்ற கூட்டத்தில் மட்டுமே தங்களை சந்திப்பேன் என கூறியும் , அடிப்படை வசதிகள் தேவைக்கு அணுகிய நிலையில் இது போன்ற வார்த்தைகள் மாமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதால் உடனடியாக அவரை மாற்றும் வரை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனக் கூறியதால் உடனடியாக துணை மேயர் உள்ளிட்ட 23 தி.மு.க. உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த அ.தி.மு.க , பா.ம.க , பா.ஜ.க. உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கடந்த மூன்று மாதமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் கூட்டத்தில் இணைக்கப்படவில்லை எனக் கூறி அவர்களும் வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. கூட்டணியினர் , கடந்த மூன்று மாத காலமாக பொதுமக்களுக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் கூட்ட நிகழ்ச்சிகளில் இணைக்கப்படவில்லை எனவும் இது போன்ற செயலால் பொதுமக்களை சந்திக்க இயலாத நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வது பொருத்தமற்றது எனக் கூறி வெளியேறியதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்க வேண்டிய வரியான 1.82 கோடி தள்ளுபடி செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்த வணிக நிறுவனங்களின் வரி வசூலை மாநகராட்சி அலுவலர்கள் வசூலிக்காததும் சிறிய நடுத்தர மக்களிடம் தண்டல் வசூல் போல் தொடர்ந்து செய்வதும் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறதாக தெரிவித்தனர்.
அதன் பின் கூட்டத்தில் மண்டல குழு உறுப்பினர்கள் நிலை குழு உறுப்பினர்கள் என மேயர் உட்பட 13 பேர் மட்டுமே இருந்தனர்.
இதேபோல் அரசு அலுவலர்களை குறை கூறியதற்கு பதில் அளிக்க ஆணையர் முயன்ற போது அதை ஏற்க மறுத்த நிலையில் அரசு அலுவலர்களையும் வெளியே வருமாறு ஆணையர் தெரிவித்ததன் பேரில் அவர்களும் வெளியேறினர்.
கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதா என எந்த அறிவிப்பும் மேயர் மற்றும் ஆணையர் சார்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu