கலை சங்கம் விழாவில் 4 குழுக்களுக்கு நிதியுதவி வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியர்
கிராமிய கலைக் குழுவிற்கு நிதி உதவி வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.
காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் இன்று மாலை நடைபெற்ற கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் நான்கு கலைக் குழுக்களுக்கு ரூ.1,20,000/- தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
மறைந்து வரும் தொன்மைச் சிறப்புமிக்க கலைகளை இளைய தலைமுறையினரும் கண்டு உணரும் வண்ணம் அவற்றை ஆவணமாக்குதல் போன்ற திட்டங்களை செவ்வன செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொங்கல் கலை விழாவினை முன்னிட்டு "இசைச் சங்கமம்" மற்றும் "கலைச் சங்கமம்" கலை நிகழ்ச்சிகள் நடத்துதல். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக் கலை விழா, பழங்குடியின் கலை விழா மற்றும் கலைத் திருவிழாக்கள் நடத்துதல் போன்ற சீர்மிகு கலைப் பணிகளை மன்றம் செயற்படுத்தி வருகிறது.
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை 35 மாவட்டங்களில் கொண்டாடும் வண்ணம், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 16.02.2024 முதல் 23.02.2024 வரை 35 மாவட்டங்களில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு, கிராமியக் கலை நிகழ்ச்சிகள் "கலைச் சங்கமம்" விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கலை சங்கமம் விழா 35-வது மாவட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நினைவு பூங்காவில், இன்று ஆர்.துர்காதேவி குழுவினர் வழங்கும் "கிராமியப் பாடல்கள்", மாசிலாமணி குழுவினர் வழங்கும் "கைச்சிலம்பாட்டம்", தேவராஜன் குழுவினர் வழங்கும் "புலியாட்டடம், காளியாட்டம்", சந்திரன் குழுவினர் வழங்கும் "தெருக்கூத்து" ஆகிய நான்கு கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இக்கலைக் குழுக்களுக்கு தலா ரூ.30,000/- வீதம் நான்கு கலைக் குழுக்களுக்கு ரூ.1,20,000/- தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. கலை சங்கமம் விழா கிராமியக் கலை நிகழ்ச்சியுடன் நிகழ்த்தப்பட்டு இன்றுடன் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஓன்றிய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் தலை சிறந்த கலை நிறுவனமாகச் செயல்படும் என்பது உறுதி.
இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், விழா ஒருங்கிணைப்பாளர் கலைமாமணி ராஜநிதி, கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu