நிறைவு பெற்றது ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு.. மனுக்கள் இன்று பரிசீலனை..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி ஐந்து ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இறுதி நாளான புதன்கிழமை காலை 9 மணி முதலே வேட்பாளர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து குவிந்தனர்.

மேளதாளங்களுடன் சரவெடி களுடனும் ஆதரவாளர்கள் வேட்பாளர்களை அழைத்து வந்து ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைநாளான புதன்கிழமை அதிமுக திமுக வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததால், ஒன்றிய அலுவலக பகுதி முழுவதும் கட்சித்தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது .மாலை 3 மணி வரையும் உணவு இடைவேளைக்குக்கூட செல்லாமல் தேர்தல் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெற்றனர். அதன் பின் நேற்று மாலை 5 மணி அளவில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்களை பதிவேற்றம் செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்து வேட்பு மனு ஏற்பு அல்லது நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கும் நிகழ்வு (இன்று) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு துவங்க உள்ளது. ஒரு வார காலத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக பல ஆயிரக்கணக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!