எந்த சுடுகாட்டில் புதைப்பது ? இறந்து 2 நாட்களாக குழப்பத்தில் குடும்பத்தினர்
இறந்த தச்சு தொழிலாளி குமார்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தில் 33 பிரிவுகளில் சுமார் 2100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
தற்போது ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் குறைந்த விலையில் பணம் பெற்றுக் கொண்டு தற்போது வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 100 நபர்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்ததால், மாவட்டம் நிர்வாகம் வழங்கிய குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் எட்டாவது பிளாக்கில் 64 வது எண் கொண்ட வீட்டில் தச்சு வேலை தொழில் செய்து வரும் குமார் தனது மனைவி தேவி மற்றும் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் துர்கா என்ற மகள் , பத்தாம் வகுப்பு படித்து வரும் பரத் என்ற மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை மாலை காஞ்சிபுரம் - கீழ்கதிர்பூர் சாலையில் குடியிருப்பு செல்லும் சாலையில் குமார் மயங்கி கிடப்பதாக வந்த தகவலையடுத்து, அவரது மகன் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். .இந்நிலையில் இவரது உடலை எங்கு அடக்கம் செய்வது என்று தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் குழம்பிப்போய் உள்ளனர்.
மேலும் இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களும் எந்த ஏற்பாடும் செய்யாமல் அலைக்கழித்தனராம். இக்குடியிருப்பின் அருகில் உள்ள கிராம சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தால், அப்பகுதி மக்கள் ஏதேனும் பிரச்னை செய்வார்களா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எங்கு கொண்டு செல்வது என்று தெரியவில்லை. இங்கிருந்து தாயார்குளம் நல்லடக்கம் செய்ய சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் எனவும், இதற்கான செலவு உயரும் நிலையில் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர்.
புதிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைக்கும் பொழுது இது போன்ற விஷயங்களை அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து இதற்கு தீர்வு காண்பதுடன், இது குறித்து அங்கு வசிக்கும் நபர்களிடம் தெரிவித்து இருந்தால், இது போன்ற நிலை உருவாக வாய்ப்பு இல்லை. ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்ற நிலை வராமல் தவிர்க்க இக்குடியிருப்பு பகுதியில் அருகில் உள்ள அரசு நிலத்தை இவர்களுக்கு நல்லடக்கம் செய்ய ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu