கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் பீகார் இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை
வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற வாலிபர் இந்தர்ஜித் மூக்கையா.
கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் காவல் நிலைய எல்லையை சேர்ந்தது தாங்கி கிராமம். இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்தர்ஜித் முக்கையா வயது (25) என்பவர் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.
கடந்த 03.09.2020 அன்று இவர் தாங்கி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரை கற்பழித்து கொலை செய்தார். மற்றும் நாயக்கன் பேட்டையைச் சேர்ந்த சுதா என்பவரை வழிமறித்து பாலியல் வன்புணர்ச்சி செய்து தாக்கியுள்ளார் .
இது சம்பந்தமாக புகார் பெறப்பட்டு அப்போதைய வாலாஜாபாத் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஜெயகுமார் இந்தர்ஜித் முக்கையா மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தார். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்பேரில் வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகர், நீதிமன்ற காவலர் ஸ்ரீபிரியா, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் சசிரேகா ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் இன்று (30.08.2023). மேற்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தர்ஜித் முக்கையாவிற்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி வாழ்நாள் சிறை தண்டனை, ரூபாய் 31,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட வாலாஜாபாத் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் வெகுவாக பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu