காஞ்சிபுரம் 196 சவரன் தங்க நகை கொள்ளை வழக்கில் ஆந்திர கொள்ளையன் கைது
4ம் வகுப்பே பயின்று ஹைடெக் திருடனாக மாறி காஞ்சிபுரத்தில் 196 சவரன் தங்க நகைகளை இரு வேறு இடங்களில் கைவரிசை காட்டிய ஆந்திர மாநில பலே திருடன் காஞ்சிபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவை சேர்ந்த பிரபல பட்டு அதிபர் ராஜேஷ் மற்றும் அதே தெருவை சேர்ந்த மகாவீர் சந்த். இவர்கள் இருவரும் வெவ்வேறு நாட்களில் தங்களது உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர்களது மாடி வீட்டின் பூட்டுகளை லாவகமாக உடைத்து சுமார் 196 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் கொள்ளை போனதாக இருவரும் தந்த புகாரின் பேரில் சிவ காஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற இரு வீட்டிலும் எந்தவித சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் காவல்துறைக்கு பெருத்த சிக்கல் ஏற்பட்டு, முக்கிய சந்திப்புகளில் காவல்துறை சார்பில் ரங்கசாமி குளம் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன கேமரா உதவியுடன் ஆராய்ந்து அதில் உள்ள சந்தேக நபர் குறித்து விசாரணை தொடங்கினர்.
இதில் திடுக்கிடும் உண்மை வெளிப்பட்டது. ஒரு நபரின் புகைப்படத்தை கொண்டு குற்றத் கணினி பதிவேட்டில் தேடுதலில் , ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரபல திருட்டு வழக்கு குற்றவாளி கரி என்கிற சதீஷ் ரெட்டி என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டு தனிப்படையினர் சதீஷ்ரெட்டியை தேடும் பணியில் ஈடுபட்ட போது அவர் புத்தூர் அருகே இருப்பது தெரியவந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதன் பின் விசாரணை மேற்கொண்டதில், அவரிடம் இருந்து 88 சவரன் தங்க நகைகள் மற்றும் மீதமுள்ள நகையை விற்ற தொகையான 36 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடிக்கும் இடத்தில் தங்க நகை எடை போட்டு பார்க்கும் சிறிய அளவிலான இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல்துறையினர் பதிந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
இதுகுறித்து டிஎஸ்பி முரளி கூறுகையில் , இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் ரெட்டி , ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவர் மீது அறுபதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாகவும் பலமுறை சிறைக்கு சென்று வந்த பலே திருடன் எனவும் , இதுபோன்று மாடி வீடுகளில் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து திருடுவதில் இவன் கைதேர்ந்தவன் எனவும் தெரிவித்தார்.
நான்காவது வரை படித்தே இருந்தாலும் , ஹைடெக் குற்றவாளியாக இன்டர்நெட்டில் பார்த்து மாறி இருப்பதும் , காவல்துறை பலமுறை கூறி வந்தாலும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் சிசிடிவி அமைக்காததும், வீட்டில் பணம் நகைகளை இருப்பு வைக்காதீர்கள் என்பதும், வெளியூர் செல்கையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவியுங்கள் என பலமுறை கூறியிருந்தாலும் யாரும் பின்பற்றாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக காவல்துறை டிஎஸ்பி முரளி தெரிவித்தார்.
சாலையில் அமைக்கப்பட்டிருந்த காவல்துறை சிசிடிவி இக் குற்றத்தை கண்டுபிடிக்க பெரிதும் உதவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu