காஞ்சிபுரத்தில் திமுக அரசை கண்டித்து அமமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் திமுக அரசை கண்டித்து அமமுக கண்டன ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அமமுக மாவட்ட செயலாளர் மொளச்சூர் பெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக காஞ்சி மாவட்ட செயலாளர் மொளச்சூர் பெருமாள் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசுத்துறைகள் தோறும் அதிகரித்து வரும் முறைகேடுகள், மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மொளச்சூர் இரா.பெருமாள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் மொளச்சூர் பெருமாள், ஓராண்டுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதற்கு மாறாக மக்களை வஞ்சிப்பதாகவும், எந்த ஒரு பணிக்கும் கையூட்டு பெறாமல் பணி வழங்குவதில்லை என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என கூறிய அவர், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இதுகுறித்து எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் அமைதி காத்து தங்களை வளர்த்துக் கொள்வதிலேயே குறியாக உள்ளதாகவும் , இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக மின்சார கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. விடியல் தருவதாக கூறிவிட்டு வேதனையே திமுக அரசு தமிழக மக்களுக்கு தந்ததாகவும், இதற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என கூறினார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் போல் சென்னையில் டி.டி.வி.தினகரன் தலைமையிலும், வேலூர், ராணிப்பேட்டை , திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர்கள் வேளியூர் தனசேகரன், கூரம் ட.பச்சையப்பன், ரஜினி குமாரவடிவேல், பகுதி செயலாளர்கள் அசோக்குமார், பார்த்தசாரதி, கார்த்திகேயன்,சீனிவாசன் மற்றும் ஏராளமான அமமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!