காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், குடிமைப் பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களுடன் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில் காஞ்சிபுரம் வட்டம் , வளத்தோட்டம் மேட்டுக்காலனி மாரியம்மன் கோயில் தெரு என்ற முகவரியில் இன்று நண்பகல் சுமார் 1200 மணியளவில் மனோகரன் என்பவரது வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொது விநியோகத் திட்ட அரிசியினை. ஒரு வாகனத்தில் ஏற்றும்போது மாவட்ட உணவு வழங்கல் அலுவலக அதிகாரிகள் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேற்படி வாகனத்தில் இருந்த 29 சிப்பங்கள் மற்றும் மேற்படி நபரது வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 18 சிப்பங்கள் ஆக மொத்தம் 47 சிப்பங்களில் சுமார் 2340 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி உரிய ஆவணங்கள் எதும் இன்றி இருந்ததால் மகஜர் சாட்சிகளின் முன்னிலையில் கைப்பற்றுகை செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 2024 முதல் 20.05.2024 வரை ரூ.96,626/ மதிப்புள்ள சுமார் 17102 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி 4 வாகனங்களுடன் கைப்பற்றுகை செய்யப்பட்டு, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் கீழ் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரால் 7 நபர்களின் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு நபர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்கப்பெறும் பொது விநியோகத்திட்ட அரிசியினை முறையாக பயன்படுத்துமாறும், வெளிநபர்களுக்கு விற்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu