1072 ஆண்டு பழமையான ஆழ்வார் திருக்கோயிலை காணவில்லை.. முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பரபரப்பு புகார்...
காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் வட்டம், கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட 1072 ஆண்டு பழமையான நின்று அருளின பெருமாள் உய்யக் கொண்ட ஆழ்வார் எனும் பெருமாள் திருக்கோயில் இருந்து உள்ளது.
அந்த கோவில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் இருந்த நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் திருக்கோவில் தற்பொழுது காணாமல் போய் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் கூறியதாவது:
ஒரு காவல் நிலையம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தால் எந்த அளவிற்கு அதிர்வுகளை ஏற்படுத்துமோ அதே போல் ஒரு தாசில்தார் அலுவலகம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி வெளி ஊடகங்களில் வெளி வருமேயானால் எந்த அளவிற்கு அதிர்வலைகளை மக்கள் மனதில் ஏற்படுத்தவும் அதேபோன்று இன்று காஞ்சிபுரம் அருகே ஒரு பெருமாள் கோயில் களவாடப்பட்டு அதன் சிலைகளும் களவாடப்பட்டது என்று கூறினால் பெரும் அதிர்ச்சி ஏற்படும்.
இது முற்றிலும் உண்மை என்பதற்கான கல்வெட்டு சான்றிதழ்கள் உள்ளது. சோழர் பேரரசர்களால் கட்டப்பட்டு வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷமான கல்வெட்டுக்களுடன் கூடிய நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார்கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல் போனதை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை,
மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணில் இருந்து மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவர்களுக்கும் தலைவர்களாக உள்ள ஜீயர்களுக்கும் இன்று வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு என்றும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
ஒரு தொண்மையான திருக்கோயிலை காணவில்லை என காவல் துறை முன்னாள் ஐஜி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu