நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கோப்புப்படம்
குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளி சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்(டி.என்.சி.எஸ்.சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது.
குறுவை சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடையாகும் நெல் ஜனவரி-மார்ச் மாதங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன. நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தைச் சுற்றி படூர், மலையாங்குளம், ஆனம்பாக்கம், அமராவதிப்பட்டணம், மல்லிகாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் நெல் பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இக்கிராமங்களில் அறுவடை செய்கின்ற நெல்லை காட்டாங்குளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
காட்டாங்குளம் பகுதியில் சம்பா பருவ சாகுபடி காலத்திற்கு மட்டும், நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படுகிறது.
மற்ற காலங்களில் நெல் கொள்முதல் நிலையம் இயங்காததால், சொர்ணவாரி மற்றும் நவரை பருவத்திற்கு அறுவடை செய்யும் நெல்லை வெளிச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
அச்சமயங்களில், வெளிச்சந்தைகளில் கட்டுபடியாகாத விலைக்கு நெல்லை வியாபாரிகள் வாங்குவதால், விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதாக இப்பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே, படூர், அமராவதிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்திய பகுதியான காட்டாங்குளத்தில் நிரந்தரமாக செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu