போலி நகைகளை கொடுத்து அசல் தங்க நகையை வாங்கிச் சென்ற பெண் உட்பட இருவர் கைது

போலி நகைகளை கொடுத்து அசல் தங்க நகையை  வாங்கிச் சென்ற பெண் உட்பட இருவர் கைது
X
நகைக்கடைகளில் போலி நகைகளை கொடுத்தும், கவனத்தை திசைத் திருப்பியும் தங்க நகைகளை வாங்கிச் சென்ற கும்பலை கைது செய்தனர்

நகைக்கடைகளில் போலி நகைகளை கொடுத்தும், கவனத்தை திசைத் திருப்பியும் தங்க நகைகளை வாங்கிச் சென்ற கும்பலை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.

சென்னை, ஆதம்பாக்கம், கக்கன்நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் தகலாராம் சவுத்ரி(43), இவர் அதே பகுதி பிரதான சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.கடந்த வாரம் 19ம் தேதி இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் தன்னை உமா என அறிமுகப்படுத்திக் கொண்டார். பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகளை வாங்க வந்திருப்பதாக கூறி, உரிமையாளரிடம் போலி நகைகளை கொடுத்து, ஏழு சவரன் நகைகளை வாங்கிச் சென்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று ஆதம்பாக்கம், கருனீகர் தெருவில் நகைக்கடை நடத்திவரும் ஜிதேந்தர் குமார்(51), என்பவரின் கடைக்கு வந்த பெண் ஒருவர் நகைகளை பார்த்து எதையும் வாங்காமல் சென்றார்.அவர் சென்ற பின், ஒன்றரை சவரன் கம்மல் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்தும் புகார் செய்யப்பட்டிருந்தது.சம்பந்தப்பட்ட நகைகக்கடைகளின் கண்காணிப்பு கேமராக்களில் கிடைத்த பெண்ணின் உருவம் ஒருவரே என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர்கள், சக நகைக்கடை உரிமையளர்களுக்கு மோசடி பெண் குறித்த புகைப்படத்தை, 'வாட்ஸ் அப்' வாயிலாக அனுப்பி வைத்திருந்தார்.இந்நிலையில், நேற்று ஆயில்மில் பஸ் நிறுத்தம், மேடவாக்கம் மெயின்ரோட்டில் உள்ள நகைக்கடையில் போலி நகைகளை கொடுத்து அதே பெண் மற்றும் ஒரு நபர் ஏமாற்ற முயன்றனர். உஷாரான நகைக்கடை உரிமையாளர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் சேலம், தாதக்காப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி ராதா(35), சேலம், கொண்டாரம்பட்டியை சேர்ந்த சங்கர்(33), என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களுடன் சாந்தி என்ற பெண் என மூவரும் சேர்ந்து, போலிநகைகளை கொடுத்தும், கவனத்தை திசைத் திருப்பியும் நகைகளை மோசடி செய்து திருடியது தெரியவந்தது.இந்த வகையில் திண்டுக்கல், சென்னை மாம்பலம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல நகைக்கடைகளில் மோசடி, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்களிடம் இருந்து, மோசடி செய்ய வைத்திருந்த போலி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பின், இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சாந்தியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story