பார்சலில் வந்த வலி நிவாரணி மாத்திரைகள் : விற்பனை செய்துவந்த 5 பேர் கைது
X
வலிநிவாரணி மாத்திரைகளை பார்சலில் வரவழைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஐவர்
By - S.Kumar, Reporter |30 Dec 2021 7:45 PM IST
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போதைக்காக விற்பனை செய்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்
பார்சலில் வந்த 700 வலி நிவாரணி மாத்திரைகள் சிக்கிய சம்பவத்தில் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் இருந்து கூரியர் வாயிலாக சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் வரவழைத்து சென்னை, புறநகரில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போதைக்காக விற்பனை செய்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு, சென்னை புறநகர் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ஆலந்தூரில் உள்ள கூரியர் நிறுவனம் ஒன்றில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஒரு பார்சல் வந்ததாகவும், அது சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக ஊழியர்கள் தகவல் தந்தனர்.
அங்கு விரைந்த தனிப்படையினர் பார்சலை பரிசோதித்தனர். அது, 'டைடோல்' எனும் வலி நிவாரணி மாத்திரை என தெரியவந்தது. அது போதை மாத்திரைகளாக பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், பார்சலை வாங்க வந்த இருவர் பிடிபட்டனர்.
விசாரணையில் அவர்கள் ஆலந்தூர், ஆபிரகாம் நகரை சேர்ந்த விமல்ராஜ்(25), பட்ரோடு, சில்வர் தெருவை சேர்ந்த அருண் (21), என்பதும், பரங்கிமலை, ஆபிசர்ஸ் தெருவை சேர்ந்த கெவின்பாபு(22), என்பவர் வாங்கி வர சொன்னதும் தெரியவந்தது.
கெவின்பாபுவை போலீசார் பிடித்து விசாரித்ததில், இதேபோல கிண்டி கூரியர் அலுவலகத்திலும் போதை மாத்திரைகளை வாங்க சென்ற வளசரவாக்கம், வேலன் நகரை சேர்ந்த அருண்(22), ராமாபுரம் திருமலை நகரை சேர்ந்த ஜெகநாதன்(18), ஆகியோர் பிடிபட்டனர். இந்த கும்பல் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து பணம் செலுத்தி கூரியர் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும், வலி நிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமாக பெற்று சென்னை மற்றும் புறநகரில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
அவர்களிடம் இருந்து, 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 700 மாத்திரைகள், 20000 ரூபாய் பணம், 6 செல்போன்கள், 4 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் போதை மாத்திரைகளை கடந்த சில மாதங்களாக விற்று வந்தது தெரியவந்தது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu